கோயில் வரலாறு

image

சித்தர்களுக்கெல்லாம் சித்தராகிய அகத்தியர் பெருமானின் வாழ்விடமாகிய தென்பொதிகை மலையிலிருந்து 16ம் நூற்றாண்டில் “சித்தர்” ஒருவர் புலியூரான் கிராமத்தில், இக்காலத்தில் சிறப்பு பெற்று விளங்குகின்ற அருள்மிகு சித்தநாத குருநாதர் கோயிலுக்கு வடமேற்கே 1.5 கி.மீ. தொலைவில் உள்ள “கட்டபுளியமரத்தின்” கீழ் தங்கி வாழ்ந்து வந்தார்.

சித்தர் புலியூரான் கிராமம் செழிப்புற வேண்டியும் , மக்கள் நலமுடன் இருக்க வேண்டியும் 21 தேவதைகளுக்கு அமுது படைத்து பூசித்து வந்தார். பல சித்துவேலைகள் செய்து மக்களுக்கு மருத்துவ சேவையும் செய்துவந்தார்.

அவருடைய சித்து விளையாட்டுகளில் குறிப்பிடதக்க சிறப்புவாய்ந்ததாக இருந்தது “விசமுறிவு” என்பதாகும். எத்தகைய கடினமான விசமானாலும் தோல் சம்பந்தப்பட்ட நோயானாலும் தன்னுடைய தவ ஆற்றலால் அவர்களுக்கு தீர்த்தம் கொடுத்து குணப்படுத்தும் வல்லமை பொருந்தியவராக இருந்துவந்தார். இன்றைய காலநிலையிலும் அந்த கட்டபுளியமரத்தின் உறுதிதன்மை சித்தரின் தவ வலிமையை வெளிப்படுத்தி கோயிலின் தல விருட்சமாக விளங்குகின்றது.

சித்தர் பகல் வேளையில் கிராம மக்களுக்கு சேவைகள் செய்தும், இரவு வேளையில் தொடர்ந்து 21 தேவதைகளுக்கு அமுது படைத்து பூசை செய்துவந்தார். அவருடைய தவ வலிமையால் 21 தேவதைகளும் அவர் கண்முன் தோன்றி அமுதினை பெற்று சென்றனர்.

இவ்வாறு அவர் செய்யும் இந்த பூசைகளை யாரும் அறியாவண்ணம் பார்த்து கொண்டார். எங்களது குல முன்னோர்களில் ஒருவரான தம்பிரான் என்பவர் சித்தரின் செயல்களை காண விரும்பி ஓர் இரவு வேளையில் சித்தரை பின் தொடர்ந்து சென்று மறைந்து இருந்து, சித்தரின் பூசைகளை கவனித்து வந்தார், இதை அறிந்த 21 தேவதைகளும் சித்தர் படைத்த அமுதினை ஏற்க மறுத்தனர். இதை உணர்ந்த சித்தர் எங்களது மூதாதையரை அரவத்தினால் தீண்ட செய்து எங்களது மூதாதையரை மயக்கமுற செய்தார். அதன் பின்னர் 21 தேவதைகளும் சித்தர் முன் தோன்றி அமுதினை ஏற்றுக் கொண்டனர்.

சித்தரும் மனமிரங்கி எங்களது மூதாதையரை மன்னித்து தீர்த்தம் கொடுத்து அவரை விழிப்புர செய்தார். எங்களது மூதாதை தான் செய்த தவறை உணர்ந்து சித்தரின் தாள் பணிந்து வணங்கி நின்றார். சித்தரும் அவரை ஆசிர்வதித்து,பக்தியில் மிகுந்த புத்திரனே உன்னை பக்தனாக ஏற்று கொண்டேன். இனி என் காலம் முடியும்வரை என்னுடன் உறவு கொண்டு உதவி செய்துவர, எந்த குறைகளுடனும் எந்தவித நோய்களுடனும் எந்தவித விசகடிகளுடனும் என்னை நாடிவரும் பக்தர்களுக்கு, நீ என்னை மானசீகமாக உன்மனதில் நிறுத்தி என் நாமம் சொல்லி தீர்த்தம் வழங்கிட ஈடு இணையற்ற சுகம் பெறுவர் என வாக்கு அளித்து, உன் சந்ததியினரும் இதுபோன்று தீர்த்தம் வழங்கிவர அவர்களும் வாழ்வாங்கு வாழ்வர் என அருள் புரிந்தார்.

எங்கள் மூதாதை(தம்பிரான்) சித்தரின் அனுக்கிரகம் பெற்று சித்தர் முக்தி அடையும் காலம் வரை பக்தர்களின் எவ்வித நோய்க்கும் தீர்த்தம் வழங்கி சித்தருக்கு பணிவிடை செய்து மகிழ்ச்சியாக இருந்து வந்தார்.  சித்தர் முக்தி அடைந்தவுடன், அவரின் அருள்வாக்குபடி எங்கள் மூதாதை தம்பிரான் மனமகிழ்ச்சியுடன் சித்தரை அடக்கம் செய்து அவ்விடத்தில் சித்தருக்கு கருவறை எழுப்பி, கோயில் கட்டி, 21 தேவதைகளுக்கும் சித்தருக்கும் அமுது படைத்து அபிசேகம் செய்து உலகம் எங்கும் மகிழ்ச்சி பொங்கும் வண்ணம் “சித்தர் ஆலயம்” என பெயர் சுட்டி அனுதினமும் இறைபணி செய்துவந்தார்.

பின்னர் எங்கள் மூதாதை “தம்பிரான்” முக்தி அடைந்ததும் அவரது மைந்தர் சித்தரின் கருவறைக்கு அடுத்து அவரை அடக்கம் செய்து இரண்டாம் நிலை கருவறை எழுப்பி அவ்விடத்தில் பீடம் அமைத்தும், அவரது பணியினை தொடர்ந்து செய்துவந்தார். இவ்வாறாக தம்பிரான் வாரிசுகளான பரம்பரை பூசாரிகள் பக்தர்களின் வசதிக்காக கோயிலை விரிவாக்கம் செய்தும், கோயிலை நிர்வகித்தும் வருகின்றனர்.