திருவிழாக்கள்
குடமுழுக்கு விழா தெய்வங்களுக்கு தெய்வீக ஆற்றலை பெருக்குவதற்கான விழாவாகும். பல்வேறு புனித ஆறுகள் மற்றும் சுனைகளில் இருந்து கொண்டு வந்த நீரை குடங்களில் நிறைத்து யாகம் நடத்தி மந்திரங்களை ஓதி அந்த குடநீரை கொண்டு தேவதைகளையும் கோபுர கலசத்தையும் நீராட்ட செய்வதே குடமுழுக்கு விழாவாகும்.
இத்தகைய சிறப்புவாய்ந்த விழா இக்கோவிலில் ஸ்ரீ விக்ருதி வருடம் மாசி மாதம் 4ஆம் நாள் (16-02-2011) புதன்கிழமை அன்று “குடமுழுக்கு” பெருவிழாவாக வெகுசிறப்பாக நடைபெற்றது.
சித்திரை மாதம் முதல் நாள் உற்சவர் சிதம்பரத்தாண்டவர் காளை வாகனத்தில் எழுந்தருளி, கிராமத்தில் உலா வருவார். மறு நாள் கிராமத்தில் உள்ள பெரிய ஊற்றில் தீர்த்தவாரி விழா கொண்டாடப்பட்டு திரும்புவார்.
ஆடி மாதம் 18 ம் நாள் அன்றும் ஆடி மாதம் அமாவாசை நாளன்றும், பக்தர்கள் தங்களுடைய முன்னோர்களை நினைவில் வைத்து வணங்குவர். அன்று கட்ட புளியமரத்தில் தீர்த்த கலசத்தில் புனித நீர் நிரப்பி சிறப்பு பூசை நடைபெறும். உற்சவர் சிதம்பரத்தாண்டவருக்கு அபிசேகம் நடைபெறும். பக்தர்கள் திருவாசகம் பாடி சித்தநாதரை வணங்கி சரணடைவர்.
கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று கோயில் தீப விளக்குகளால் அழகாக அலங்கரிக்கப்பட்டு மிக எழிலாக காட்சி அளிக்கும். சிதம்பரத்தாண்டவர் காளை வாகனத்தில் எழுந்தருளி, ஊர் முழுவதும் உலா வந்து பக்தர்களுக்கு அருள் புரிவார்.
கோயிலின் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்படும். தீயசக்திகள் யாவும் அழிந்து, பக்தர்கள் அச்சமின்றி, மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழ நிகழ்த்தப்படுவதாகும்.
மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் சிறப்பு பூசை இயற்றி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.
குறிப்பு : திருவிழாக்கள் மற்றும் சிறப்பு பூசைகள் இயற்றும் போது அங்காள ஈஸ்வரி அம்மனுக்கு சக்கரை பொங்கல் பிரசாதமாக படைக்கப்பட்டு வணங்கப்படுகிறார்.
வீரபத்திரருக்கு பால் பொங்கலும், இருளப்பருக்கு கற்கண்டு பொங்கலும், பாதாளி அம்மனுக்கு பஞ்சாமிர்தமும், விநாயகருக்கு பாலில் அவல் சேர்த்து பிரசாதமாக படைக்கப்பட்டு வணங்கப்படுவார்கள்.
மகா சிவராத்திரி திருவிழா இத்தலத்தில் ஐந்து நாட்கள் நடைபெறுகிறது.திருவிழாவின் முதல் நாள் கொடியேற்றத்துடன் நடைபெறும்.
சிவராத்திரி விழாக்காலம் முழுவதும் கோயிலில் சேவை செய்வதற்காக, கோயில் பூசாரிகளில் நால்வருக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு வேளையில் கோயிலின் கொடிக்கம்பம் தர்ப்பை புல், நெல் மணிக்கதிர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, நந்தி சின்னம் வரையப்பட்ட உற்சவ கொடி, சிறப்பு பூசைக்கு பின் கொடிக்கம்பத்தில் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.
அருள்மிகு இருளப்பருக்கு சிறப்பு பூசை செய்து அவருடைய ஆசியுடன், இரவு வேளையில் கப்பறை மயானக் கரைக்கு எடுத்து செல்லப்பட்டு, அன்று காலையில் புதிதாக பொன் இருளாயி அம்மன் உருவத்தை மணல் கொண்டு உருவகம் செய்து, ஆக்ரோஷமாக அலங்கரிக்கப்பட்டு வீற்றிருக்கும் மயான காளிக்கு, முப்பலி கொடுக்கப்பட்டுள்ள மூவகையான உதிரத்தோடு கப்பறை, அம்மனுக்கு செலுத்தப்படும். அத்துடன் தீபாராதனையுடன் சிறப்பு பூசைகள் இயற்றி பக்தர்கள் அம்மனின் ஆசி பெறுவார்கள்.
குறிப்பு : ஏனைய சிவன் மற்றும் காளி கோயில்களில் இவ்விழா மகா சிவராத்திரி அன்று அல்லது மறுநாள் நடைபெறும். இத்தலத்தில் மட்டும் அம்மனுக்கு முதல் மரியாதை செலுத்தும் விதமாக மகா சிவராத்திரிக்கு முந்தைய நாள் நடைபெறுகிறது.
மகா சிவராத்திரி அன்று அலகு நிலை நிறுத்துதல் நிகழ்ச்சி இத்தலத்தில் முக்கிய நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது. அன்று இரவு சதுர்த்தசி திதி மூன்றாம் சாம வேளையின்போது கர்ப்பகிரகத்தில் சுவாமிகளுக்கு முன் வைக்கப்பட்டுள்ள தீர்த்த கலசத்தில், பூசாரிகள் சித்தநாதரின் அருள் பெற்று அலகுகளை நிலை நிறுத்துவார்கள். இந்த கண் கொள்ளா பேரானந்த காட்சியை பரவசத்துடன் பக்தர்கள் கண்டு, தீபாராதனை யுடன் சித்தநாதரின் ஆசி பெற வணங்குவர்.
சித்தநாதரின் பேராற்றலை கொண்டாடும் வண்ணம் பழம் மற்றும் தானியங்களை செம்பு வட்டலில் வைத்து பூசாரிகள் நந்தி மண்டபத்தை சுற்றி ஆடிப்பாடி வரும் பேரழகு காட்சி நடைபெறும்.
விழாவின் நான்காம் நாள் வழக்கம் போல் வரும் அமாவாசையன்று அதிகாலையில், சிவராத்திரியன்று அலகு நிலை நிறுத்துதல் நிகழ்ச்சியை சித்தநாதர் ஏற்றுக்கொண்டதை கொண்டாடும் விதமாக “அலகு பள்ளயம்” எனும் அன்ன படைப்பு, சுவாமிக்கு படைக்கப்பட்டு, பூசை இயற்றிய பின் அதனை பக்தர்கள் பிராசாதமாக ஏற்று கொள்வார்கள்.
பக்தர்கள் கட்ட புளியமரம் சென்று சித்தருக்கும், தம்பிரானுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக அவர்களை வழிபடுவார்கள்.
விழாக்கால விளையாட்டு என்றழைக்கப்படும் பாரிவேட்டை திருவிழா, அருள்மிகு நல்லதம்பி சுவாமி ஆசி பெற்றதும் நடைபெறும். உற்சவர் சிதம்பரத்தாண்டவர் காளை வாகனத்தில் அழகாக அலங்கரிக்கப்பட்டு எழுந்தருள்வார். பின் வேட்டை ஆயுதங்களுடன் பக்தர்கள் படை சூழ, வேட்டைக்கு சென்று திரும்புவார். இவ்விழாவை பக்தர்கள் மன மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.
அன்றிரவு கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறும்.
மகா சிவராத்திரி விழா நிறைவடைந்தவுடன், விழா சிறப்பான முறையில் எவ்வித தடையின்றி, காவல் தெய்வங்களின் ஆளுமையுடனும், ஆசீர்வாதத்துடனும் நடைபெற்றதற்கு மரியாதை செலுத்தும் விதமாக கருப்பணன் பூசை இரவில் அவர்களுக்கு உரித்தான சமைக்கப்பட்ட மாமிச வகைகள் வைத்து சிறப்பு பூசை இயற்றப்படும்.