துதிப்பாடல்

image

கும்மி பாடல்

சீர்மேவு தென்புலியூர் நகர்தங்கிடு
    சித்தன்மேல்க் கும்மியான் செப்புதற்கு
சிவசங்கர நணிதிங்களிற் சிறுகொம்பதின் குறை ஒன்றில்லா
    சித்திவிநாயகன் காப்பாமே  (1)  

பொருள்

பெருவளத்துடன் விளங்குகின்ற தென் புலியூரில் குடிகொண்டு அருள்புரிகின்ற
     சித்தன் பெருமையை கும்மி பாடலாக வடிப்பதற்கு அழகான நிலவை
சூடிய சிவசங்கரனின் மைந்தன் சிறு கொம்பதனை பெற்றதானால் குறை ஒன்றும்
     இல்லாத சிறு தந்தத்தை உடைய வெற்றி விநாயகனை போற்றியும்,  (1)
பேர்மேவு தென்புலியூருறை சித்தன்மேல்ப் 
     பிரியமாய்க் கும்மியான் பேசுதற்கு
பிழைசற்றேனு முராதுற்றிடமறைமுற்றிலும் மறைவித்திடும் 
     பிரம சரஸ்வதி தாழ்பணிவாம்  (2) 
பெரும்புகழ் பெற்ற புலியூர் சித்தன்மேல் பிரியமாய் 
    கும்மிபாடல் பாடுவதற்கு பிழை ஏதும் ஏற்படாது 
அருள்புரிய வேதங்களுக்கு எல்லாம்
    வேதநாயகி பிரம்ம சரஸ்வதின் தாழ்பணிந்தும்,  (2)
வானத்தில் நட்ச்சத்திரஞ் சொலிக்ககண்டு 
       தானு மின்மினி சொலித்தது போல் 
வனமுற்றிலக்கன நன்னூலினைக் கற்றுணர்ந்தோர்கள் முன் 
       வரைந்தேன் கும்மியிப் புல்லறிவோன்.  (3)
வானத்தில் நட்சத்திரம் சொலிப்பதை பார்த்து மின்மினி 
    பூச்சிகள் சொலிப்பது போல் பழமையான இலக்கண நல்நூல்களை 
கற்று உணர்ந்தவர்கள் முன் இவ் ஒயில் கும்மியை அற்ப புல்
    அறிவுடையோனாகிய நான் பாடுகின்றேன்.  (3)
கானக்குறத்தியைக் கைப்பிடித்த எங்கள் 
    கந்தரெனும் பாலசுப்பிரமண்யம்  
கைலைக்கிரிதனி லுற்பவமுகுமப் பொழுதுறுநல்நவ 
    காருண்ய வீரர் குலத்துதித்த  (4)   
கானகுறத்தி எனும் வள்ளியை மணமுடித்த எங்கள் 
    கந்தரெனும் பாலசுப்ரமணியத்துடன் கைலாயத்தில் 
உற்பவமூர்த்தியாக உருபெற்ற நல் நவகாருண்யர் 
    எனும் நவவீரர் குலத்தில் உதித்த  (4)
செங்குந்த பண்டாரசேய் சிதம்பர நான் 
    செந்தமிழ் ருத்ரோக்காரி ரிசபத்
திங்க ளிருதச மாயிரத் தெண்ணுத்தருபத்து முத் 
    தெய்தி யதனிலிக் கும்மி சொன்னேன்.  (5)
செங்குந்த மரபில்வந்த பண்டாரமாகிய சிதம்பரம் எனும் நான்,
    1863 ஆம் ஆண்டு தமிழ் ருத்ரோக்காரி வருடம், 
ரிசபம் எனும் வைகாசி மாதத்தில்,இருபதாம் தேதி  
    இவ் ஒயில் கும்மி பாடலை எழுதுகின்றேன்.  (5)
மங்குல் போலிக்கும்மி மாசுபோக்கி என்னை 
    வாழ்த்திடக் கற்றோரின் தாழ்பணிந்தேன் 
மனமகிழ்வா எனதுகுலகுரு தெய்வ மூதாதைசித்தர்  
    மலரடி போற்றிக் கும்மிசொல்வேன்.  (6)
இவ் ஒயில் கும்மி பாடலில், தூயவானில் தோன்றும் கருமேகம் போன்ற 
    குறைகள் ஏதும் இருந்தால் அதனை நீக்கி என்னை வாழ்த்திட 
கற்றுணந்தவர்கள் முன் தாழ்பணிகின்றேன். மனமகிழ்ச்சியுடன் எனது
    குலதெய்வம் சித்தர் மலரடி பணிந்து இக்கும்மி பாடலை பாடுகின்றேன்.  (6)
பூமாதுக் கோர் திலகமது போலவே 
    பொங்குசல நிலமா வளங்கள் 
பொருந்திக்கிணர் குளம்ஏரிகள் செழும்பாய்ப் பெருகிடவே வயல் 
    பொன்னிரச் சென் நெலுடனி லங்கும்  (7)
பூமாதேவியின் நெற்றி திலகம் போல,  
    கிணறு குளங்கள் யாவும் நீர்நிலைகள்  
நிரம்பி ஓடுவதால், நிலவளங்கள் பெருகி 
    பொன்நிற நெல்மணிகளுடனும்.  (7)
மாமதுபெருகி வயலில்ப் பாய்வதால் 
    வாய்த்த கன்னலதி சென்னிரமாம் 
வடுவின்றியே மடமாலயமொடு மாடமாளிகையோங்கிடு 
    வளப்பம்வாய் திலங்கு யர்நகர்  (8)      
தேன்போன்று நீர் பாய்ந்து ஓடி வயல்களில் பாய்வதனால், 
    தித்திப்புடன் கூடிய கரும்பு வயல்களும், குறைபாடுகள் 
இல்லாத மாடமாளிகைகளும்ஆலயங்களுடன் செழுமையாக 
    விளங்குகின்ற உயர்நகராகிய புலியூருக்கு.  (8)
தென்பொதிகை யிலிருந்தெய்தி யொருசித்தர்  
    சித்து விளையாடவென் றின்னகர் 
திருவுற்ற மர்ந்திருபத் தொருகுருபந்தியை வருவித்தமு 
    தீய்ந்து புளித்தருக் கீழிருந்தார்.  (9)
தென்பொதிகையில் இருந்து சித்து விளையாட எண்ணி சித்தர் 
    ஒருவர் இவ்வூர் வந்து புளிய மரத்தின் கீழ் தங்கி இருந்து 
இரவு நேரத்தில் இருபத்தியொரு தேவதைகளை வரவழைத்து, 
    அமுது படைத்து வாழ்ந்து வந்தார்.  (9)
இன்புரு சித்தரியல் பறியவென்று 
    எந்தன் மூதாதை யினிலொருவர் 
இரவிற்றிருப் புளியந்தருவதனிற் கருகதனில்வந் 
    திருந்து சித்தரைப் பார்த்திடவே  (10)
இந்நிலையில் சித்தரின் செயல்களை தெரிந்துகொள்ள 
    வேண்டி எங்களின் மூதாதையில் ஒருவர் ( தம்பிரான் ) 
இரவு நேரத்தில் புளியமரத்திற்கு அருகில் சென்று 
    மறைவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார்,  (10)

சித்தர் குருபந்திக் கீயுமமு ததைத் 
    தேவதை வாங்காதிருந் ததிநால் 
சினமுற்றங்கு ரென்தந்தையைத் தெரிவுற்றோ ரறவைச் சொலித் 
    தீண்டிடச் செய்து ணவீய்ந்த பின்பு  (11)
இதை அறிந்த தேவதைகள் சித்தர் படைத்த அமுதை வாங்க வரவில்லை, 
    இதன் காரணத்தை ஞானத்தால் அறிந்த சித்தர் சினமுற்று அவர் அருகில் இருந்த 
பாம்பிற்கு கட்டளையிட்டு எங்கள் மூதாதையரை தீண்டசெய்து மயக்கமுற செய்தார், 
    பின்னர் சித்தர் படைத்த அமுதினை தேவதைகள்  வாங்கிசென்றனர்.  (11)
சித்தமிரங்கி என்தந்தை விசமதைத்
    தீர்த்தங் கொடுத் துயிர்க்கிடவே 
சிரமீ திருகரமே குவித்திருவாளர்தனதருதாள் பணிந் 
    தேற்றித் துதித்து வணங்கி நின்றார்.  (12)
பின்னர் கோபம் தனிந்த சித்தர் மனம் இரங்கி தீர்த்தம் கொடுத்து 
விசத்தை நீக்கி எங்கள் மூதாதையரை ( தம்பிரான்) உயிர்ப்பித்தார்,
உடனே அவர் தன் இருகைகளையும் தலைமேல் தூக்கி சித்தரின் 
தாழ்பணிந்து துதித்து வணங்கி நின்றார்.  (12)
பக்தியில் மிகுந்த புத்திரனே யுன்னைப் 
    பக்தனா யானுள்ளங் கொண்டதிநால் 
பரமுற்றிடும்வறை என்னுட நுறவு ற்றிருந்துதவி உந்தன் 
    பாரம்பறை யுள்ள நாளளவும்  (13)
உடனே சித்தர் பக்தியில் மிகுந்த புத்திரனே உன்னை 
    நான் பக்தனாக ஏற்றுகொண்டேன் இனி என் காலம் 
முடியும்வரை என்னுடன் உறவுகொண்டு உதவி செய்து 
    வந்தால் உன் பரம்பரை உள்ள காலம்வரை,  (13)
எக்குரை எவ்விச மெவ்வித நோய்களு 
    மென்னாமஞ் சொல்லியே தீர்த்தமிட்டால் 
இணைஒப்பிலா சுகமுற்றுரவென வாக்களித் திடலானே நீ 
    என்றுமுன் சந்ததியும் வாழ்கவே  (14)    
எந்த விதமான குறைகளுடனும் எந்தவிதமான நோய்களுடனும் எந்தவித 
    விசநோய்களுடனும் உன்னை வேண்டி வரும் பக்தர்களுக்கு என் நாமம் சொல்லி ”தீர்த்தம்“ 
வழங்கிட ஈடு இணையற்ற சுகம் பெறுவர் என வாக்கு அளித்து உன் சந்ததியினரும் இது 
    போன்று தீர்த்தம் வழங்கிவர எல்லோரும் வாழ்வாங்கு வாழ்வர் என அருள்புரிந்தார்.  (14)
இவ்விதஞ் சித்த ரனுக்கிரகம்  பெற்று 
    எந்தவிஷ நோய்க்குந் தீர்த்த மீய்ந்து  
எந்தன்பிதா சந்தோசமாய் விந்தைசித்தரந்த மதி 
    லிசைந்து பணிவிடை செய்தடக்கி  (15)
இவ்விதமாக எங்கள்மூதாதை ( தம்பிரான் ), சித்தரின் அனுகிரகம் 
    பெற்று எவ்வித நோய்க்கும் “”தீர்த்தம்”” வழங்கி பணிவிடை செய்துவந்தார், 
சித்தர் முக்தி அடைந்தவுடன் அவரை அடக்கம் செய்வதற்கான 
    பணிகளை மேற்கொண்டு மகிழ்வுடன் சித்தரை அடக்கம் செய்தார்.  (15)
செவ்வயா மூவேழு தேவதையும் வைத்துச் 
    சித்தரொடு அபிசேகஞ் செய்து 
செகமெங்கினும் புகள்தங்கிட மகிழ் சித்தராலயமென்றத் 
    திருநாமிலங்கச் செய்தனரே  (16)
செம்மையாக மூவேழு தேவதை எனும் இருபத்தொரு 
    தேவதைகளுடன் சித்தருக்கும் அபிசேகம் செய்து உலகம் 
எங்கும் மகிழ்ச்சி பொங்கும் வண்ணம் “ சித்தர் ஆலயம் “ 
    என பெயர்சூட்டி அனுதினமும் வணங்கி வந்தார்.  (16)
இந்தவித கர்த்தராலயத்தில்ச் சித்த 
    ரிணங்கு தம்பிரான ந்தமதில் 
இதமாயவர் தனையனவர் தனையே மறுபிரகாரத்தி 
    லிருத்திப் பூசையியற்றி வந்தார்  (17)  
உலகம் போற்றும் இவ்வாலாயத்தில் தம்பிரான் சித்தருக்கு கருவறை 
    அமைத்தும், தம்பிரான் முக்தி அடைந்தவுடன் அவரது மைந்தர் 
கருவறையின் மறுபிராகரத்தில், தம்பிரானை அடக்கம் செய்து, 
    அவ்விடத்தில் பீடம் அமைத்தும் பூசை செய்து வந்தார்.  (17)
எந்தன் முற்பிதா வத்தம்பிரான் தனைய 
    ரீன்ற மைந்தரெலா மொன்று சேர்ந்து 
இருநவ் நிதிதனையே பெறவெனவே நினைத்தனை வோருமா
    இரைந்து போற்றி பணிந்திடவே.  (18)
குபேரனிடம் உள்ள ஒன்பது நிதிகளில் முதன்மை பெற்றவை, வளமான பொருட் செல்வத்தை குறிக்கும் 
    சங்க நிதி (வலம்புரிச்சங்கு) மற்றும் வளமான கல்விச் செல்வத்தை குறிக்கும் பதும நிதி (தாமரை)ஆகும்.
எங்கள் மூதாதை தம்பிரானின் மைந்தர் பெற்றெடுத்த மைந்தர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இவ்விரு
    நிதிகளை பெற வேண்டி, அவர்களை பணிந்து போற்றி வணங்கி வந்தனர்.  (18)
சித்தர் தம்பிரானதி தெய்வமாகவுஞ் 
    சீரா ரங்காள மகமாயி 
சிதம்பர உற்சவர் நந்தி பரமபொரு ளக்கினி வியர்வை 
    சித்திர ரிருளர் பாதாளி  (19)
சித்தர் மற்றும் தம்பிரான் ஆளும் தெய்வமாகவும், அங்காள ஈஸ்வரி,
    மகமாயி, சிதம்பரத்தாண்டவர் எனும் உறசவர், நந்தி, சிவனுக்கு
இணையான அக்கினி வியர்வை சித்திரர் எனும் வீரபத்திரர், இருளர் 
    எனும் இருளப்பன் (முத்திருளப்பன்), பாதாளி அம்மன்,  (19)
அத்திமுகனும் வேடப்பன் பேச்சியம்மன் 
    அன்பு நல்லதம்பி ஒண்டிவீரன் 
அருமைப்பைரவர் கம்பத்தடிய ராலடிக் கருப்
    பையா ராக்கு சோணை யப்பநென்று  (20)
அத்திமுகன் எனும் விநாயகர், வேடப்பன் எனும் முத்துக்கருப்பன், 
    பேச்சிஅம்மன், அன்பை பொழிகின்ற நல்லதம்பி ,ஒண்டிவீரன், 
அருமை பைரவர், கம்பத்து அடியார், ஆலடியார், கருப்பையா எனும் கருப்பணன், 
    இராக்கு எனும் இராக்காயி அம்மன், சோணைையப்பன் என்று  (20)
மாவெளிலாக அமைத் திலங்கு உயர்
     மாச்சிசேர் சித்தனின் கோவில்தனில்
 மணமங்களமுட நென்குலமுழுதுந் துதியது செய்திட
     மாசிக் களரி யிலேகிவர  (21)
பேரெழிலாக அமைந்து விளங்குகின்ற பெருமை மிகு
    சித்தனின் கோயிலில் மாசிக் களரியில் அவரைத் துதித்து
வணங்கிட என் குல மக்கள் அனைவரும் மனதில் 
    நல்ல ஆர்வத்துடன் வந்து கூடுவர்.  (21)